search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிற்சங்கம் ஸ்டிரைக்"

    போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்தால் சென்னையில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் பஸ், ஆட்டோ, கால் டாக்சிகள், அரசு பஸ்கள் ஓடின. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    சென்னை:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, டாக்சிகள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இன்று இயக்கப்படாது என அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

    இதேபோல அரசு பஸ்களையும் இயக்க மாட்டோம் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.

    ஆனால் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் இந்த வேலை நிறுத்தத்தால் சென்னையில் பாதிப்பு இல்லை. வழக்கம் போல் பஸ், ஆட்டோ, கால் டாக்சிகள், அரசு பஸ்கள் ஓடின.

    சென்னையில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாநகர பஸ்களை முழுமையாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்பேரில் அனைத்து வழித்தடங்களிலும் அதிகாலையில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன. பிரதான தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனாலும் அனைத்து பஸ் டெப்போக்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பஸ்களை எடுக்கவிடாமல் தடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

    அதேபோல பெரும்பாலான ஆட்டோக்களும் ஓடின. சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்கள், கோயம்பேடு பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் பயணிகள் பாதிக்கப்படாத வகையில் ஆட்டோக்கள் இயக்கப்பட்டன.

    சென்னையில் சுமார் ஒரு லட்சம் ஆட்டோக்கள் இருந்த போதிலும் வேலை நிறுத்தத்தில் குறைந்த அளவிலேயே ஈடுபட்டனர். பொதுமக்களின் போக்குவரத்திற்கு கை கொடுக்கக் கூடிய மாநகர பஸ்களும் ஆட்டோக்களும், ஷேர் ஆட்டோக்களும் வழக்கம் போல் ஓடியதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

    பல்வேறு தனியார் கால் டாக்சிகளும் ஓடியதால் பொதுமக்கள் பஸ், ரெயில் நிலையங்களில் இருந்து ‘புக்கிங்’ செய்து பயணம் செய்தனர். உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து வந்தவர்களும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் ஆட்டோ, டாக்சிகளில் பயணம் செய்தனர்.

    வேலை நிறுத்தத்தில் பள்ளி வேன்கள் மட்டுமே பெரிய அளவில் பங்கு வகித்தன. தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்லக் கூடிய தனியார் வேன்கள் இயக்கப்படவில்லை. வேன்கள் ஓடாது என்று நேற்று பெற்றோர்களுக்கு உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் தெரிவித்துவிட்டனர்.

    அதனால் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலானவர்கள் இன்று விடுப்பு போட்டு விட்டனர். சில பெற்றோர்கள் மட்டுமே தங்களது மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

    எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம், கல்லூரி சாலை, முகப்பேர், புழல், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி வேன்கள் ஓடாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை.

    இதுகுறித்து கொடுங்கையூர் ஆர்.வி.நகரை சேர்ந்த வேன் உரிமையாளர் அஜிஸ் கூறியதாவது:-

    மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்வதால் என்னை போன்ற வேன், ஆட்டோ வைத்து தொழில் செய்யக் கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். இன்சூரன்ஸ் உயர்வு, பழுதுபார்க்கும் இடம் போன்றவற்றால் அதிக செலவு ஏற்படும்.

    தற்போது எப்.சி.சி.க்காக வாகனங்களை நாங்களே பழுது பார்த்து தயார்செய்து வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு செல்கிறோம். மத்திய அரசு கொண்டு வருகிற திட்டம் மூலம் இதற்கு அதிகமான செலவாகும். ஆதலால் இன்று பள்ளி வேன் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வேன்கள் ஓடவில்லை. இதன் காரணமாக 70 சதவீத குழந்தைகள் பள்ளிக்கு இன்று செல்லவில்லை. 30 சதவீத மாணவர்களை பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill
    ×